கோவையில் ரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை: தாய் உள்பட மூவர் கைது | Sale of Baby Girl for Rs.1 Lakh on Coimbatore: Three Arrested including Mother

கோவை: கோவையில் ரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தையை தாயே விற்கத் துணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்தக் குழந்தையின் தாய் உள்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சாமிசெட்டிபாளையம் அருகேயுள்ள சின்னக் கண்ணன் புதூரைச் சேர்ந்தவர் ஆதி கணேஷ். இவரது மனைவி நந்தினி (22). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான நந்தினிக்கு கடந்த 14-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நந்தினிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில், நந்தினி தனக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை இடைத்தரகர் மூலம், வேறு ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்றுவிட்டதாக, கோவை மாவட்ட சைல்டு – ஹெல்ப் லைன் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணுக்கு கடந்த 26-ம் தேதி புகார் வந்துள்ளது. இதையடுத்து, சைல்டு – ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் அஞ்சலா ஜோஸ்பின் தலைமையிலான குழுவினர் மற்றும் காவல் துறையினர் நந்தினியிடம் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில், நந்தினி தனக்கு 2-வதாக பிறந்த, 14 நாட்களே ஆன பெண் குழந்தையை, கஸ்தூரி பாளையம் சத்யா நகரைச் சேர்ந்த தேவிகா (42) என்ற இடைத்தரகர் மூலமாக கூ.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் மனைவி அனிதா (40) என்பவருக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. மகேஸ்வரன் – அனிதா தம்பதிக்கு குழந்தை இல்லாததால், அவர்கள் இடைத்தரகர் மூலம் பணம் கொடுத்து நந்தினியின் குழந்தையை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சைல்டு – ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் அஞ்சலா ஜோஸ்பின், பெரியநாயக்கன்பாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல் துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் தாய் நந்தினி, தேவிகா, அனிதா ஆகிய மூவரையும் இன்று (ஆக.27) காலை கைது செய்தனர்.

Source link

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk