ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு - மோசடியாளரான நகைக்கடை மேலாளர்..!

கோவை:

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் நகைக்கடை மேலாளர் தான் வேலை செய்த கடையில் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை சலீவன் வீதியில் செயல்பட்டுவரும் எமராலட்டு ஜுவல்லர்ஸ் கடையில் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றிவருகிறார். நகைக் கடைக்கு வரும் தங்க கட்டிகளை பட்டறைகளுக்கு கொடுத்து ஆபரணமாக தயாரித்து வாங்கிவருவதை கண்காணித்து வந்த ஜெகதீஷ், தங்கம் வடிவமைப்பு,தரம் முத்திரை போன்ற பணிகளை கவனித்து வந்தார்.

இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக தங்க கட்டிகளை பட்டறை கொடுத்தது போல் கணக்குகாட்டியும், பழுதான தங்க நகைகள் என கணக்கு காட்டியும் சில தங்க நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் போலியாக பதிவேடு தயாரித்ததோடு கம்ப்யூட்டர் பதிவுகளிலும் திருத்தம் செய்து மோசடி செய்து கிட்டத்தட்ட 1467 கிராம் எடையிலான 55 லட்சம் ரூபாய் மதிப்பில் மோசடி செய்ததாக ஜெகதீஷ் மீது, நகைக்கடையின் மேற்பார்வையாளர் கார்த்திகேயன் வெரைட்டி ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெகதீசனை பிடித்து விசாரித்தபோது அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, ஜெகதீஷ் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகியிருக்கிறார். இதனால் வேலை செய்யும்போது கூட ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்துவிட்ட ஜெகதீஷ் பணம் முழுவதும் காலியான பிறகு, நகைக்கடையின் தங்கத்தை எடுத்து மோசடியாக கணக்கு காட்டி வெளியே விற்க ஆரம்பித்தார்.

அதாவது 45 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் ஒரு பவுன் தங்கத்தை ஜெகதீஷ், பவுன் இருபதாயிரம் என தனக்கு தெரிந்த நண்பர்களுக்கு விற்பனை செய்துவந்துள்ளார். இப்படி கடந்த ஆறு மாதங்களில் மட்டும்  55 லட்சம் ரூபாய் மதிப்பிலான 180 பவுனுக்கும் அதிகமான நகையை 37 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததோடு, அந்தப் பணத்தை வைத்து மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.

அப்படி விளையாடிய ஜெகதீசன் கடந்த சில மாதங்களில் மட்டும் 2 கோடி ரூபாய்வரை பணத்தை வென்றிருக்கிறார். அதோடு நிற்காத ஜெகதீஷ் மீண்டும் அந்தப் பணத்தை வைத்து ரம்மி விளையாடியபோது மொத்த பணத்தையும் இழந்திருக்கிறார் என்பது தெரிந்தது. இதனையடுத்து அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்த போலீசார், அதில்  98 பைசா மட்டுமே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து ஜெகதீஷிடம் மேலும் கேட்டபோது, விளையாட்டில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம். மீண்டும் விளையாடினால்  தோற்ற பணத்தை எடுத்துவிடலாம் என பேசியுள்ளார். இதனையடுத்துஜெகதீஷ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

– க. விக்ரம் 

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?