கவுன்சிலர் காரை திருடிய மாணவர் கைது..!

திருப்பூர்:

ம.தி.மு.க.கவுன்சிலர் காரை திருடிய மாணவர் கைது செய்யப்பட்டு கார் மீட்கப்பட்டது.
திருப்பூர் காந்திநகரை அடுத்த ஈ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 57). இவர் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மேலும் ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இவருடைய காரை காணவில்லை. மர்ம ஆசாமி காரை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் நாகராஜ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அதில் கார் காணாமல் போன அன்று காலை வாலிபர் ஒருவர் காரை எடுத்து ஓட்டி செல்வது பதிவாகி இருந்தது. இதன் பேரில் நாகராஜ் வீட்டின் அருகே வசிக்கும் முகமது ஷக்கி (19) என்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் காரை திருடி சென்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து முகமது ஷக்கியை கைது செய்து அவரிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் நாகராஜின் மகன் கார்த்திக் கடந்த 1 மாதத்திற்கு முன்பு கார் சாவியை தொலைத்துள்ளார். பின்னர் மாற்று சாவியின் மூலமாக காரை ஓட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் தொலைந்த சாவி முகமது ஷக்கி கையில் கிடைத்துள்ளது. அந்த சாவியை கொண்டு நாகராஜின் காரை திறந்து பார்த்துள்ளார். அது சரியாக இருந்ததால் காரை திருடி சாமுண்டிபுரம் பகுதியில் நிறுத்தி உள்ளார்.

பின்னர் வலையங்காடு பகுதியை சேர்ந்த ஒரு கும்பலிடம் காரை விற்றுக் கொடுக்குமாறும் அவர் கூறி உள்ளார். இந்த நிலையில்தான் போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டார். கைதான முகமது ஷக்கி வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் தற்போது பெற்றோருடன் காந்திநகர் பகுதியில் வசித்து வருவதும், பிளஸ்-2 முடித்துள்ள அவர் கல்லூரிக்கு செல்ல காத்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!