தமிழகம்:
முல்லை பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்ததற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், கேரள அரசு தன்னிச்சையாக தங்கள் மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுக்கொண்டதை வேடிக்கை பார்த்தது போல இதையும் திமுக அரசு வேடிக்கை பார்க்க போகிறதா? என்றும் தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள முல்லை பெரியாறு அணைக்கு அருகே, பேபி அணை உள்ளது. இந்த அணையை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று சொல்லி, தமிழக அரசு சார்பில் கேரள மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பேபி அணையை வலுப்படுத்தும் வகையில், அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட, தமிழக அரசுக்கு, கேரள மாநில அரசு அனுமதி வழங்கியதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியது…
பேட்டி
இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.. ஆனால், அதன்பிறகு மரம் வெட்டுவதற்கு தந்த அனுமதியை கேரள அரசு ரத்து செய்தது. இதுகுறித்து, கேரள மாநில வனத்துறை அமைச்சர் சசீந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, முல்லை பெரியாறு அணை அருகே, பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது… வனத்துறை அதிகாரிகள் மிகப் பெரிய தவறு செய்து விட்டனர்… அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
அனுமதி
இந்நிலையில், தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணை பகுதியில் இருந்து கேரள அரசு தங்கள் மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுக்கொண்டதை வேடிக்கை பார்த்தது போல, பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு ரத்து செய்ததை திமுக அரசு வேடிக்கை பார்க்க போகிறதா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அடுத்தடுத்து 3 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் “முல்லைப் பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது.உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர்குழுவின் அறிவுறுத்தல் படி செய்யவேண்டிய இப்பணியை கேரளா தடுத்து நிறுத்துவது சரியானதல்ல. மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வாங்கியதையே சாதனை போல அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இப்போது என்ன செய்யப் போகிறார்?,
அமைச்சர்கள்
தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணை பகுதியில் இருந்து கேரள அரசு தன்னிச்சையாக தங்கள் மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுக்கொண்டதை வேடிக்கை பார்த்தது போல இதையும் தி.மு.க அரசு வேடிக்கை பார்க்க போகிறதா? வெறுமனே கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்களது கூட்டணி கட்சியைச் சேர்ந்த கேரள முதலமைச்சரை தமிழக அமைச்சர்களை அனுப்பி நேரடியாக சந்திக்க வைத்து முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவர திரு.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தினகரன் தெரிவித்துள்ளார்.